Advertisements




 
 
 
 
 
 

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

.

Thursday, 30 May, 2013   02:21 PM
.
சென்னை,மே 30 :சர்க்கரை ஆலைகள் லெவி சர்க் கரை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய இருப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
.
பொது மக்களின் நலன் கருதி மீண்டும் லெவி சர்க்கரை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அவர் பிரதமரை கேட்டுக்கொண்டு இருக்கிறார். மத்திய அரசின் முடிவால் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நியாயவிலையில் சர்க்கரை வழங்குவது பாதிக்கப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சர்க்கரை ஆலைகள் லெவி சர்க்கரை வழங்க வேண்டும் என்ற முறையை மத்திய அரசு விலக்கிக்கொள்ள முடிவு செய்திருப்பது தொடர்பாகவும், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாகவும் மத்திய அரசு எடுத்துள்ள  முடிவு தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.  

மத்திய அரசின் இந்த முடிவுக்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன். பொது விநியோக முறையின் மூலம் சர்க்கரை வழங்குவது பாதிக்கும்.

இதனால் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும்.தற்போது மத்திய அரசு ஒரு மாதத்துக்கு 10835 மில்லியன் டன் சர்க்கரை மட்டுமே தமிழகத்துக்கு வழங்குகிறது. பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு தேவைப்படுவதில் மூன்றில் ஒரு பங்குதான் தற்போது வழங்கப்படுகிறது.

ஏற்கனவே மானிய விலையில் சர்க்கரை வழங்குவதால் மாநில அரசுக்கு பெரும் செலவு ஏற்படுகிறது. புதிய திட்டத்தின் கீழ் மத்திய அரசு லெவி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் சர்க்கரை அளவுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 காசுதான் மானியமாக வழங்கும்.

மீதி தேவைகளை வெளிச்சந்தை யில்தான் வாங்க வேண்டும். தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.13.50 காசுக்கு வழங்கப்படும். இந்த மானியம் கூட 2013-2014 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளுக்குத்தான் கிடைக்கும் என்று மத்திய அரசிடமிருந்து வந்த தகவல் தெரிவிக்கிறது.  

2014-2015ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஏற்பாடு தொடருமா என்பது தெளிவாக இல்லை. திடீரென லெவி சர்க்கரை திட்டத்தை விலக்கிக்கொண்டிருப்பது பொது விநியோக முறை மூலம் சர்க்கரை வழங்குவது பாதிக்கப்படும்.  மேலும் வெளிச்சந்தையில் தற்போது கிலோ ஒன்றுக்கு 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் விலை உயர்வு ஏற்பட்டால் மாநில அரசுதான் அந்த சுமையை ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஏற்கனவே கடுமையான மானிய சுமையை மாநில அரசு ஏற்றுள்ளது.  தேவையான சர்க்கரை முழுவதையும் வெளிச்சந்தையில் இருந்து மாநில அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்படுவதால் ஏழை மக்களுக்கு நியாய விலையில் பொது விநியோக முறை மூலம் வழங்குவது ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும்.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை லெவி சர்க்கரை திட்டத்தை ரத்து செய்ய எடுத்துள்ள முடிவு, நியாயவிலைக் கடைகளை நம்பியுள்ள ஏழை மற்றும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் மத்திய அரசு இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும். தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லது வெளிச்சந்தைக்கும் பொது விநியோக முறையில் உள்ள விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மத்திய அரசே முழுமையாக ஏற்க உறுதி தர வேண்டும். 20142015ம் ஆண்டுக்கு பிறகும் இந்த மானியம் தொடர வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
| |

மற்றவை :